உலகிலேயே மிகவும் பருமனான நபர்


980 இறாத்தல் நிறையுடைய உலகிலேயே மிகவும் பருமனான நபர் பிரித்தானியாவில் இருக்கும் இரகசியம் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் பிரித்தானிய "த சன்' ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

அளவுக்கு அதிகமாக உண்ணும் வியாதியால் பாதிக்கப்பட்ட போல் மேஸனது (48 வயது) உயிரைக் காப்பாற்ற 20,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போல் மேஸன் தினசரி 20,000 கலோரிகளைக் கொண்ட உணவை உள்ளெடுத்து வருகிறார். இது வயது வந்த ஆணொருவர் உட்கொள்ளும் 2500 கலோரிகளை விட 8 மடங்கு அதிகமாகும்.

அவர் ஒரு இரவு மட்டும் மூன்று குடும்பங்களுக்கு போதுமான உணவை உள்ளெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சபோல்க் நகரிலுள்ள இப்ஸ்விச் எனும் இடத்தில் வசிக்கும் அவர், கடந்த 8 வருட காலமாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவரது சுகாதார கவனிப்புக்காக மட்டும் வருடாந்தம் 100,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான அரசாங்க வரிப் பணம் செலவிடப்பட்டு வருகிறது.

5 வயது ஆணழகன்

மிக இளம் வயதில் தசைகள் உருண்டு திரண்டு கட்டுக்கோப்பான உடல் அழகைப் பெற்றவர் என்ற உலக சாதனையை ரோமானியாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் செய்துள்ளான்.

தற்போது தனது பெற்றோருடன் இத்தாலியில் வாழ்ந்து வரும் கிலியானோ ஸ்ரோ என்ற மேற்படி சிறுவன் தனது இரு வயது முதற்கொண்டே தசைகளை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளைப் பெற்றுவந்தான்.

கிலியானோ தனது கால்களிடையே இரும்பு பந்தை வைத்தபடி 10 மீற்றர் தூரம் கைகளால் வேகமாக நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறான்.

இது தொடர்பில் கிலியானோவின் தந்தை கியுலியன் ஸ்ரோ விபரிக்கையில், "எனது மகன் பிறந்தது முதற்கொண்டே நான் உடற்பயிற்சி செய்வதை பார்த்து வருகிறான். மிக இள வயதில் கட்டுடல் பயிற்சி வழங்குவது ஆபத்தானது என்பதை நான் அறிவேன். நான் எனது மகனுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் மிகச் சிரமப்பட்டு பயிற்சிகளை வழங்கினேன். அவனை ஒரு போதும் தனியே பயிற்சி செய்ய நான் அனுமதித்ததில்லை'' என்று தெரிவித்தார்.

கியுலியனின் நான்கு பிள்ளைகளில் மூத்த பிள்ளையான கிலியானோ, ஏனைய சிறுவர்கள் போல் படங்கள் வரைவதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தம் உறிஞ்சும் அட்டை மூலம் கொள்ளையரை கண்டுபிடித்த பொலிஸார்


தஸ்மானியாவிலுள்ள அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றவாளியொருவரை இனம் காண இரத்தம் உறிஞ்சும் அட்டையின் குருதி வகையை பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான குற்றவியல் பரிசோதனையொன்று நடத்தப்பட்டது உலகிலேயே இது முதல் தடவையாகும். 8 வருடங்களுக்கு முன் 71 வயது பெண்மணியின் வீட்டில் கொள்ளைக் கோஷ்டியொன்று தனது கை வரிசையை காட்டி விட்டுச் சென்றிருந்தது.

இந்நிலையில் மேற்படி கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த பீற்றர் அலெக் கனொன் என்பவரது குருதியை அட்டையொன்று உறிஞ்சியது. இந்த அட்டையானது பொலிஸாரால் ஒரு தடயமாக எடுத்து வைக்கப்பட்டு அதனது குருதி மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் பீற்றர் அலெக் கனொன் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.

அவரது குருதி மாதிரியானது இரத்தம் உறிஞ்சும் அட்டையின் குருதி மாதிரியை ஒத்திருந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் தான் பங்கேற்றதை கனொன் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

குழந்தையின் தோலில் புனித குர்ஆன் வசனங்கள்


தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

இக் குழந்தையின் உடலில் குர்ஆன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.

தென் ரஷ்யாவில் செச்சினியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் "அல்லாஹ்" என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.

தொடர்ந்து அக் குழந்தையினது முதுகு, கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அராபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புதிய குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாகக் கூறிய மதினா, இதன்போது குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்து சிறுவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.

"இதன்போது எமது மகனை பற்றிப் பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனை தொட்டிலிலேயே படுக்க வைத்திருப்போம். அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவரது தந்தை, தற்போது தீவிர மதப் பற்றாளராக மாறியுள்ளதாக பாலகனின் தாயாரான மதினா தெரிவித்தார்.

இது தொடர்பில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமட்பாஷா அமிராலேவ் விபரிக்கையில், "இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான்.
எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்'' என்று கூறினார்.


பாய்மரப் படகில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய சிறுமி


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், 10 மீட்டர் நீளம் கொண்ட 'பிங்க் லேடி' என்ற பாய்மரப் படகில் உலகை வலம் வரும் சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஜெஸிகா சிட்னியிலிருந்து இந்தப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். கடலில் கடும் காற்று வீசி வருவதால் மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறார் ஜெஸிகா. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து படகைச் செலுத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட எட்டு மாதம் கடலில் பயணம் செய்யவிருக்கிறார் ஜெஸிகா. இது அங்கு சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. இவ்வளவு சின்ன வயதில் தனியாக பாய்மரப் படகில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பலரும் விமர்சித்துள்ளனர். ஜெஸிகாவின் தாயார் ஜூலி வாட்சன் இதை நிராகரித்துள்ளார்.

"இதில் பயப்படவோ, தயங்கவோ எதுவும் இல்லை. ஜெஸிகா மிகுந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் இருக்கிறார்" என்றார் அவர்.

முதலில் வடக்கு நியூசிலாந்து செல்லும் ஜெஸிகா, பின்னர் பிஜி, சமோவா, தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்கா செல்கிறார். கடைசியில் அவர் ஆஸ்திரேலியா திரும்புகிறார். கிட்டத்தட்ட 7400 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் பயணிக்கவுள்ளார்.

இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், உலகைக் கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.

ஆசியாவிலே விலையுயர்ந்த ஆடம்பர குடியிருப்பு விற்பனை



சீனாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் ஹொங்கொங்கிலுள்ள ஆடம்பர குடியிருப்பொன்றை 57 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கி ஆசியாவிலேயே அதிக விலையான சொத்தை வாங்கிய சாதனையை நிலை நாட்டியுள்ளார். 5 படுக்கையறைகளைக் கொண்ட இந்த வீடு அமைந்துள்ள நிலப்பரப்பின் ஒவ்வொரு சதுர அடியும் 9,200 அமெரிக்க டொலர் விலையுள்ளதாகும்.

இந்த மாடிக் குடியிருப்பானது கொண்டுயிட் வீதியில் 39 ஆம் இலக்க முகவரியில் 6,000 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

பிரதான கட்டடத்தின் 68 ஆவது மாடியில் இந்த குடியிருப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே கட்டடத்தில் இதையொத்த பிறிதொரு குடியிருப்பு 51 மில்லியன் டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்


உலகிலேயே மிகக் குள்ளமான மனிதன் என்ற பெருமையை நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தபா மாகர் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளார்.

2 அடி உயரடைய அவர் அன்றைய தினம் தனது 18 ஆவது பிறந்தநாளை தனது உயரத்திற்குச் சமனான உயரமுடைய கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.

அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.

இந்நிலையில், உலகிலேயே குள்ளமான கஜேந்திராவுக்கு பொருத்தமான மணப்பெண்ணைத் தேடும் முயற்சியில் அவரது பெற்றோர் இறங்கியுள்ளனர்.

தனது பிறந்த தினத்தில் கஜேந்திரா விபரிக்கையில், "நான் தற்போது 18 ஆவது பிறந்த நாளில் காலடியெடுத்து வைத்து வயது வந்த ஒருவராக மாறியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த நாளுக்காக பல வருடங்களாக காத்திருந்தேன். ஒரு சிறுவன் என்னைப் போன்று சிறியவனாக இருப்பது விநோதமான ஒன்றல்ல. ஆனால் ஒரு வயதுக்கு வந்த மனிதனாக நான் இருப்பதை விசேடத்துவமானதாக கருதுகிறேன்'' என்று கூறினார்.

தலைநகர் காத்மண்டுவிலிருந்து 125 மைல் தொலைவிலுள்ள பக்லங் மாவட்டத்தில் கஜேந்திரா பிறந்தார். பிறக்கும் போது அவரது நிறை 600 கிராம் மட்டுமே இருந்ததாக அவரது தாயார் தனா மாயா கூறினார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்வதே தனது கனவு எனத் தெரிவித்த கஜேந்திரா, தனது வயதை ஒத்த இளைஞர்கள் போன்ற தோற்றம் இல்லாத போதும் அவர்களைப் போன்று பெண்கள் மீதான இரசனையைக் கொண்டுள்ளார்.

"நான் தலைநகர் காத்மண்டுவில் பயணம் செய்தபோது பல பெண்களைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் எனது சொந்தக் கிராமத்திலுள்ள பெண்களை விட மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தனர். தற்போது எனது பெற்றோர் எனக்குப் பொருத்தமான மணமகளைத் தேடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். நான் எனது குடும்ப வீட்டில் மாடியொன்றைக் கட்டி அதில் எனது எதிர்கால மனைவியுடன் வசிக்கத் திட்டமிட்டுள்ளேன்" என அவர் மேலும் தெவித்தார்.

எனினும், நேபாளத்தில் ஒரு சில குள்ளமான பெண்களே இருப்பதும் அவர்கள் கஜேந்திராவை விட சிறிது உயரமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன்

திருமணம் நடைபெற்ற தினத்தன்று இரவு திருடன் என தவறுதலாக நினைத்து மணமகனால் மணமகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற நிறைவேற்றதிகாரியான ஜோன் தபுட்(62 வயது) என்பவரும் அவரது காதலியான நான்ஸி டின்ஸ்மோரும் (62 வயது) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்த அன்றைய இரவில் திடீரென ஜோன் தபுட்டிற்கு விழிப்பு ஏற்பட்டது. தனது புது மனைவி தன்னருகே கட்டிலில் படுத்திருப்பதாகக் கருதிய ஜோன் தபுட்,வேறு எவரோ அறையில் நடமாடுவதாக உணர்ந்தார்.

திருடன் எவனோ நுழைந்திருப்பதாக எண்ணி அச்சமடைந்த அவர் தனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டுள்ளார்.

மார்பில் ஒரேயொரு குண்டு பாய்ந்த நிலையில் நான்ஸி உயிரிழந்தார். தவறுதலாக தனது அன்புக்குரிய மனைவியைச் சுட்டுக் கொன்றதை அறிந்த தபுட் கதறி அழுதார்.

இறுதியில் நான்ஸியின் மரணச் சடங்கு அவரது திருமணம் இடம்பெற்ற தேவாலயத்திலேயே நடைபெற்றது.

தபுட்டிற்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

"இது துக்ககரமான விபத்து" என பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி கெவின் புறுகுனல் தெரிவித்தார்.

தினசரி உணவாக அரைக் கிலோ மண்


இந்தியா, தமிழ்நாடு, கள்ளக்குறிச்சியில் நாளாந்த உணவாக அரைக் கிலோ மண்ணை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி (வயது 25).

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களிமண்ணை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்.

விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறார். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார். இவ்வாறு சாப்பிடும் போது பெரிய கற்கள் தடைப்பட்டால் மட்டும் முடிவில் அவற்றைக் கீழே துப்பிவிடுவார்.

இது குறித்து கோபி கூறுகையில் "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின்பு, தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணைச் சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை'' என மண்ணைச் சாப்பிட்டுக் கொண்டே தெரிவித்தார்.

மீள வளர்ந்த மனித மண்டையோடு

விபத்தொன்றில் மண்டையோட்டின் அரைப் பகுதி சேதமடைந்த ஒருவருக்கு அப்பகுதி மீளவும் வளர்ச்சியடைந்துள்ள அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஹெக்ஸ்ஹாம் நகரைச் சேர்ந்த கோர்டன் ரிக்கே (72 வயது) இவ்வாறு மண்டையோடு மீள வளர்ச்சி பெற்றுள்ளது.

1995 ஆம் ஆண்டு கோர்டன் ரிக்கு ஏற்பட்ட விபத்தையடுத்து சேதமடைந்த மண்டையோட்டுக்குப் பதிலாக டைட்டானியம் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேற்படி டைட்டானிய தகட்டால் பக்க விளைவுகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டபோது அத்த தகட்டுக்குள் இழக்கப்பட்ட மண்டையோடு மீள வளர்ந்திருப்பதை கண்டு அதிசயித்துள்ளனர்.

இது தொடர்பில் கோர்டன் ரி விபரிக்கையில், "என்னுடைய மண்டையோட்டின் அரைப் பகுதி ஒரு போதும் வளராது என மருத்துவர்கள் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஆனால் தற்போது மண்டையோடு மீளவும் வளர்ந்துள்ளமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று கூறினார்.

கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாயை காப்பாற்றிய குழந்தை

கோமா நிலைக்குச் சென்ற பெண்ணொருவர், தனது குழந்தையின் குரலால் சுய உணர்வுக்கு மீண்ட சம்பவம் பிரித்தானிய வரெக்ஸ்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது.

கரென் மொறிஸ்ரோ கிளட்டன் (32 வயது) என்ற மேற்படி பெண்மணி, கடந்த ஜூலை மாத இறுதியில் தனது மகனுக்கு 2 1/2 மாத வயதாக இருக்கும் போது நோய்த் தொற்றுக்கு இலக்காகி கோமா நிலைக்குச் சென்றார்.

கோமா நிலையில் தனது உள்ளுணர்வு தான் மரணமடைய வேண்டும் என்றே விரும்பியதாகவும் ஆனால், தனது மகன் ஒலிவரின் குரலைக் கேட்டதும் 'தான் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும்' என்ற உத்வேகம் ஏற்பட்டதாகவும் கரென் தெரிவித்தார்.

கரென் கோமா நிலைக்குச் சென்ற போது அவசர சிகிச்சைப் பிரிவில் பல வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் தனது மகனது குரலை கேட்க முடியாதிருந்தது. சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்ட பின் மகனின் குரலைக் கேட்டு கோமா நிலையிலிருந்து அவர் மீண்டுள்ளார்.

குழந்தையை சிகரெட்டால் சுட்ட தாய்

தனது குழந்தையின் முதுகில் சிகரெட்டால் சுட்ட இளம் தாயொருவருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

சார்லொட் சட்டன் (19 வயது) என்ற இந்தத் தாய் தனது 15 மாதக் குழந்தையின் அழுகுரலைப் பொறுக்க முடியாது மூன்று தடவைகள் அக் குழந்தையின் முதுகில் சிகரட்டால் சுட்டுள்ளார்.

மேற்படி வழக்கு விசாரணையொன்றின் போது சார்லொட், நீதிமன்றத்திற்கு வெளியே நின்றபடி 20 நிமிடங்களில் 10 சிகரெட்டுகளை ஊதித் தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.

9 மாத சிறைத் தண்டனை விதித்து வொர் செஸ்டர் கிறவுண் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்ததையடுத்து சார்லொட் அலட்சியமாக தோளைக் குலுக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஐந்து ரூபாய் நாணயத்தால் உயிர் பிழைத்தவர்

இனந்தெரியாதோரால் சுடப்பட்ட ஒருவர், ஐந்து ரூபாய் நாணயத்தால் உயிர் பிழைத்த அதிசயம் இந்தியா, மும்பையில் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணா ஷெட்டி என்பவரே இவ்வாறு உயிர்தப்பியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கிருஷ்ணா ஷெட்டி, கடந்த சனிக்கிழமையன்று தனது வீடியோ கடையின் முன்னால் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாதோர் நால்வர் இவர்களை நோக்கிக் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

இதில் கிருஷ்ணாவின் வயிற்றை ஒரு குண்டு துளைத்துச் சென்றது. மற்றொரு குண்டு அவரது மார்பைத் தாக்கியது. அவர் தனது சட்டைப் பையில் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று வைத்திருந்தார்.

குண்டு அந்த நாணயத்தில் பட்டுத் தெறித்ததில் கிருஷ்ணா உயிர் தப்பினார். உடனடியாக பாந்த்ராவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குறித்த 5 ரூபா நாணயம் சட்டைப் பையில் இல்லாதிருந்தால் குண்டு இதயத்தைத் துளைத்துச் சென்றிருக்கும்.

இச் சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

'எயார் இந்தியா' விமானத்தை தடுத்து நிறுத்திய சுண்டெலி


இந்தியா, கேரள மாநிலம், கோழிக்கோட்டிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 412 பயணிகளுடன் சவூதி அரேபியா, ரியாத்திற்குப் புறப்படவிருந்த 'எயார் இந்தியா' விமானத்தில் சுண்டெலியொன்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. மேற்படி விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது விமானியின் அறைக்கு பதற்றமாக வந்த பணிப்பெண் ஒருவர், விமானத்தில் சுண்டெலி ஒன்று சுற்றித்திரிவதாகக் கூறினார். இது குறித்து விமானி, விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக விமானத்தை இயக்கவேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.

பின்னர் விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள், விமானத்தில் ஏறி எலிவேட்டையில் இறங்கினர். நீண்ட நேரத் தேடுதலுக்கு பிறகும் எலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, எலியைக் கண்டுபிடித்து வெளியேற்றுவதற்காக விமானம் மும்பை கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்து, பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதேபோன்று கடந்த மாதமும் கனடா நோக்கிச் சென்ற 'எயார் இந்தியா' விமானத்தில் எலி புகுந்ததால் பஞ்சாப்பில் அவசரமாக தரை இறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமாதான முத்தமிட்ட காதலரின் நாக்கைக் கடித்து காயப்படுத்திய காதலி



காதலருடனான கடும் விவாதத்தையடுத்து அவரது நாக்கைக் கடித்து காயப்படுத்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மொன்ரோ நகரில் இடம்பெற்றுள்ளது.

விவாதத்தின் போது மேற்படி காதலி (39 வயது), பியர் போத்தலால் காதலனின் தலையை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் கோபாவேசத்தில் இருந்த காதலியை சமாதானப்படுத்த காதலன் அன்பாக அவரை முத்தமிட்ட வேளையிலேயே, காதலி அவரின் நாக்கைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

வாயிலும் உடையிலும் இரத்தம் சிந்திய நிலையில் காதலன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காதலிக்கு எதிராக வீட்டு வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மகனை இரு வருட காலமாக மூடிய அறையில் சிறைவைத்த தாய்

பெற்ற மகனைக் கடத்திச் சென்று சலவை இயந்திரத்தின் அளவு உயரமுடைய சிறிய அறையொன்றில் சுமார் இரு வருட காலமாக அடைத்துவைத்த தாயொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் றிச்சர்ட் றிக்கி என்ற மேற்படி சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பை சிறுவனின் தந்தையும் முன்னாள் பொலிஸ் அதிகாரியுமான மைக் செகேவ்டியாவிடம் நீதிமன்றம் ஒப்படைத்ததையடுத்து, சிறுவனின் தாயும் மைக் செகேவ்டியாவின் முன்னாள் காதலியுமான ஷனொன் வில்போங் தனது மகனுடன் மாயமானார்.

இந்நிலையில், றிச்சர்ட் றிக்கியையும் ஷனொன் வில்போங் கையும் தேடி பொலிஸார் வலை விரித்தனர்.

இலினொயிஸ் மாநிலத்தில் பிராங்லின் எனும் இடத்திலுள்ள ஷனொனின் தாயாரான டயானி டொப்ஸின் வீட்டிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

எனினும், பொலிஸாரால் காணாமல் போன இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் டயானி ரொப்ஸின் (51 வயது) வீட்டிலிருந்த மறைவான சிறிய அறைப் பகுதி குறித்து செகேவ்டியாவுக்கு (48 வயது) சந்தேகம் ஏற்பட்டது.

அவர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை டயானி ரொப்ஸின் இருமாடி வீட்டில் தேடுதல் நடத்துவதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றனர்.

தேடுதலின் போது டயானியின் வீட்டிலிருந்த 5 அடி அகலம் 12 அடி நீளம் சலவை இயந்திரத்தின் உயரம் கொண்ட மறைவிட அறையில் சிறுவன் றிச்சர்ட்டும் அவரது தாயாரான ஷனொன் வில்போங்கும் ஒளிந்திருப்பதைப் பொலிஸார் கண்டனர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி தனது 7 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள சிறுவன் றிச்சர்ட், மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டதும் வெளியுலகை அதிசயத்துடன் அவதானித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த இரு வருட காலப் பகுதியில் சிறுவனுக்கு வெளியுலகைப் பார்க்க ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை சிறுவனைக் கடத்தியமை தொடர்பில் சிறுவனின் தாயாரான ஷனொன் வில்போங்கும் (30 வயது) கடத்தலுக்கு உதவியமை, உண்மையை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறுவனின் பாட்டியாரான டயானி ரொப்ஸும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இரு வருடங்களாக மூடிய அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த போதும், சிறுவனது மனோநிலை ஆரோக்கியமாக காணப்பட்டமை தமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக மாநில பொலிஸ் அதிகாரி ஸ்டான் டிக்ஸ் கூறினார்.

உலகிலேயே மிகவும் சிறிய கிளி இனம் கண்டுபிடிப்பு


உலகிலேயே மிகவும் சிறிய கிளி இனம் பபுவா நியுகினியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பபுவா நியுகினியாவிலுள்ள வடக்கு தாழ் நில பகுதியில் வாழும் இந்தக் கிளிகள், 9 சென்ரிமீற்றருக்கு குறைவான உயரத்தையும் 11.5 கிராமுக்கு குறைவான நிறையையும் கொண்டுள்ளன.

அமெரிக்க கலிபோர்னிய விஞ்ஞான கல்விக்கூடத்தைச் சேர்ந்த கலாநிதி ஜக் டம்பச்சர் என்பவர் தலைமையிலான குழுவினரே இந்த அரிய பறவையை எதுவித பாதிப்புமின்றி பிடித்துள்ளனர்.